பூதலூர் கல்லணை கால்வாயில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் அதிகாரிகள் கவனிப்பார்களா?

பூதலூர் கல்லணை கால்வாயில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2021-06-03 16:59 GMT
திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம் பேட்டை கொள்ளிடம் ஆற்றில் இருந்து ராட்சச குழாய்கள் மூலம் அறந்தாங்கி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குழாய்கள் தரைக்கடியில் பதிக்கப்பட்டு உள்ளன. இடையே குறுக்கிடும் காவிரி, குடமுருட்டிவெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளின் மேல்பகுதியில் சிறிய அளவிலான பாலம் அமைத்து அதன் மேல் இந்த குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த தண்ணீர் முழு விசையுடன் கடைசிவரை செல்ல தகுந்த இடைவெளியில் ஆங்காங்கே காற்று போகும் சிறிய வால்வுகள் பொருத்தப்பட்டு, சிமெண்டு சிலாப்புகளால் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிக அழுத்தத்தில் தண்ணீர் செல்வதால் பூதலூர் கல்லணைகால்வாயில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் 4 இடங்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் மேல்நோக்கி பீய்ச்சி அடித்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குழாயில் துணிகளை கொண்டு சுற்றி தண்ணீரை கீழ்நோக்கி விழுமாறு செய்து தினமும் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குழாயில் இருந்து வீணாகும் குடிநீர் கல்லணை கால்வாயில் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பூதலூர் முனி ஆண்டவர் கோவில் அருகிலும், ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகிலும் உள்ள காற்றுபோகும் வால்வு அமைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பில் மேலுள்ள சிமெண்டு சிலாப்புகளை அகற்றி, சிலர் குளிப்பதற்கு நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

கடும் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஆங்காங்கே ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து குழாய் உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்