தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் பணி தொடக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நேற்று தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலை
நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை காரணமாக மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதல் பிரிவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 13-ந் தேதி முதல் திரவ ஆக்சிஜன் உற்பத்தி நடந்து வருகிறது.
இங்கு இருந்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆலையின் முதல் பிரிவில் நேற்று வரை 442.90 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில் டேங்கர் லாரிகள் மூலம் 417.38 டன் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 33.87 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 29.64 டன் ஆக்சிஜன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
2-வது பிரிவு
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள 2-வது பிரிவிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் கடந்த 30-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அதில் விரைவில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதி மட்டுமே இருந்தது. இதனால் இதுநாள் வரை திரவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வாயு நிலையிலான ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகிறது. ஆனால் அதனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக உற்பத்தியான 3,955 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் வீணாக காற்றில் கலந்து உள்ளது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 260 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தியாகி காற்றில் கலந்து உள்ளது.
சிலிண்டர்களில்...
இந்த நிலையில் வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த கண்காணிப்பு குழு அனுமதியின் பேரில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொண்டது. ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிலிண்டர்களில் வாயு நிலையிலான ஆக்சிஜனை நிரப்பும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து மருத்துவ பயன்பாட்டுக்கான வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ரூ.11 கோடி செலவில் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதுவரை எங்கள் தொழில்நுட்பம் திரவ ஆக்சிஜன் உற்பத்தியை மையமாக கொண்டே இருந்தது. தற்போது காற்றில் வீணாக கலக்கும் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்யும் தொழில்நுட்ப வசதியை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் தினமும் 400 மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்ய முடியும். நாட்டின் தேவைக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்வோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.