நாகை அருகே பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
நாகை அருகே பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த 1,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.;
நாகப்பட்டினம்:
நாகை அருகே பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்த 1,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முன்கூட்டியே சிலர் மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் சாராயம் காய்ச்சப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வடக்கு பொய்கைநல்லூர் பனை தோப்பில் பூமிக்கு அடியில், 6 பேரல்களில் 1,500 லிட்டர் சாராய ஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. இதையடுத்து 6 பேரல்களையும் போலீசார் வெளியே எடுத்தனர். தொடர்ந்து 1,500 லிட்டரை பறிமுதல் செய்து அதனை தரையில் கொட்டி அழித்தனர்.
2 பேர் கைது
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 38), மணிகண்டன் (24) ஆகிய 2 பேரையும் பிடித்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.