தூத்துக்குடியில் 100 திருநங்கைகளுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடியில் 100 திருநங்கைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 100 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 100 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இலவச பஸ் பயணம்
முத்தமிழ் அறிஞர் கலைஞர், மூன்றாம் பாலினத்தவருக்கு திருநங்கைகள் என பெயரிட்டார். மேலும் திருநங்கைகளுக்கென நலவாரியம் அமைத்தார். மேலும் அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கவும், வீடுகள் கட்டித்தரவும் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் நலவாரியம் விரைவில் சீரமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்படும். மேலும் சான்றிதழ் பெயர் மாற்றுதல் உள்ளிட்ட உங்களின் பிரச்சினைகளும், நீங்கள் தொடர்ந்து படிக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம் 4 ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. நீங்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி நல்ல பல தொழில்களை மேற்கொண்டு சமுதாயத்தில் நல்ல வாழ்வை அமைத்து நலமுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்று
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பிச்சை, நபார்டு உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், ஊரக புத்தாக்க திட்ட மேலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி மடத்தூர் சிப்காட் வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, வனத்துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் அடர்காடு திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்று நட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா, வனச்சரகர் விமல்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.