45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி
திருப்பூர் பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூர் பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் மாவட்டத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் வருவாய்த்துறையினர், போலீசாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
நீண்ட வரிசையில்...
இதன் காரணமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி வர வர பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதிகளவில் முதல் டோஸ் போடுகிறவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு...
மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜெயப்பிரகாஷ் தலைமையில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர். நேற்று முன்தினம் 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசி பெற்ற நிலையில் அதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பிவைத்தனர்.