அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்

உர செலவைக் குறைத்து அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-03 15:58 GMT
திருப்பூர்
உர செலவைக் குறைத்து அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
மண் பரிசோதனை
விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடைக்குப் பின்பு உழவுக்கு முன்பு மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் போது வயலின் வரப்பு ஓரங்கள், வாய்க்கால் ஓரம், மரநிழல், ஈரமான பகுதிகள் மற்றும் உரம் குவிந்த இடங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் 'v' வடிவ குழிகள் அரை அடி முதல் முக்கால் அடி ஆழத்திற்கு எடுக்க வேண்டும். அந்த குழிகள் பக்கவாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்திற்கு மேல் இருந்து கீழாக சுரண்ட வேண்டும்.
இவ்வாறு சேகரித்த மண்ணை நிழலில் உலர்த்தி கல், வேர் ஆகிய பொருட்களை தவிர்த்து அதைத் தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ அளவுக்கு மண்ணை சேகரிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட மண்ணை துணிப்பையில் போட்டு அதில் விவசாயின் பெயர், முகவரி, புல எண், பாசன விவரம், பயிர்சாகுபடி விவரம் ஆகியவற்றை தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரிடம் வழங்க வேண்டும்.
ரூ.20 கட்டணம்
மண் பரிசோதனை செய்வதால் தேவையறிந்து உரமிட்டு உரச் செலவை குறைக்கலாம். மண்ணில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தால் அதை கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம். திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 6,770 மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனைக்கு ரூ.20 கட்டணம் செலுத்தவேண்டும். மண் மாதிரி எடுத்தல் மற்றும் சந்தேகங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்