பிளஸ் 2 தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்
எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் தேர்வு என்பதால் பிளஸ் 2 தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம்,
பிளஸ்-2 தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி பொன்னி:-
கொரோனாவுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் ஆசிரியர்கள் விரைவாக பாடங்களை நடத்தி முடித்துள்ளனர். நாங்களும் பொதுத்தேர்வை எழுத தயாராக இருக்கிறோம். எப்போது தேர்வு நடத்தினால் நாங்கள் எழுத தயார். அதே நேரத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோய் தொற்று குறைந்ததும் தேர்வை நடத்தலாம். தேர்வை நடத்தவில்லையெனில் அடுத்த கல்வியாண்டில் கல்லூரி படிப்பதற்கும், நீட் தேர்வுக்கு தயாராகுவதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். எங்கள் பெற்றோரும் தேர்வுக்கு பாதுகாப்பாக சென்று வாருங்கள் என்றுதான் ஊக்கப்படுத்துகின்றனர். தேர்வை ரத்து செய்து விட்டு ஒட்டுமொத்த தேர்ச்சி என்று அறிவித்தால் கல்லூரி சேரும்போது நாங்கள் எதிர்பார்த்து கேட்கிற பாடப்பிரிவு கிடைப்பது சிரமம். எனவே கொரோனா தொற்று குறைந்ததும் ஒரு மாதம் அல்லது 2 மாதம் கழித்தாலும் பரவாயில்லை, கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும். இந்த தேர்வில்தான் எங்களுடைய எதிர்காலமே அடங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான விடுமுறையை சிறிது அதிகப்படுத்தி தேர்வை நடத்தினால் மிகவும் நல்லது.
பிளஸ்-2 மாணவி ஆர்த்தி:-
தற்போது பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்தினால் எங்களுக்கு மிகவும் அச்சமாக இருக்கும். இருப்பினும் தேர்வை நடத்துவதுதான் சிறந்தது. ஏனெனில் எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அடங்கியுள்ளதால் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். தற்போது கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் 2 மாதம் கழித்து தேர்வை நடத்தலாம். நாங்கள் ஏற்கனவே தேர்வுக்கு தயாராக இருக்கிற நிலையில் மேலும் எங்களை தயார்படுத்திக்கொள்வோம். ஆகஸ்ட் மாதத்தில் தேர்வை நடத்தலாம், அதற்குள் கொரோனா தொற்றும் குறைந்துவிடும் என்று நம்புகிறோம். தகுந்த பாதுகாப்பு முறையில் தேர்வை நடத்தினால் நாங்கள் எழுத தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையத்தை ஏற்படுத்தி தேர்வு நடத்த வேண்டும். அதுபோல் ஒவ்வொரு வகுப்பறையிலும் 10 பேர் வீதம் அமர வைத்து தேர்வை பாதுகாப்பாக நடத்தி முடிக்கலாம். எங்களது பெற்றோரும் எங்களிடம் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி வாருங்கள் என்றுதான் ஊக்கப்படுத்துகின்றனர். ஒருவேளை நோய் தொற்று குறையாதபட்சத்தில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிட்டு எங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
ரெட்டிக்குப்பம் மாணவி ஹீராவின் தந்தை முத்துகிருஷ்ணன்:-
இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் பிளஸ்-2 தேர்வை நடத்துவதை தவிர தேர்வை நடத்தாமல் இருப்பதே சாலச்சிறந்தது. தேர்வை நடத்தாவிடில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்தான். இருந்தாலும் உடல் ஆரோக்கியம்தான் மிகவும் முக்கியம். படிப்பை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். ஏன் அந்த காலத்தில் எல்லாம் வயதானவர்கள் கூட வீட்டில் இருந்தே படித்திருக்கிறார்கள். கொரோனா ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களின் உடல்நலனை தேர்வை நடத்த வேண்டாம். மாறாக அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட்டு மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
சாலைஅகரம் பிளஸ்-2 மாணவி ஹேமாவின் தாய் பிரேமா:-
பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து எந்தநேரத்திலும் அறிவிப்பு வரலாம் என்று எண்ணி என்னுடைய மகள் தினந்தோறும் நன்றாகவும், தைரியமாகவும் படித்து வருகிறார். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி தேர்வு நடத்துவதுதான் முக்கியம். அதேநேரத்தில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதால் எங்கள் பிள்ளைகளை எப்படி தேர்வு எழுத தைரியமாக அனுப்புவது? மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி என்பது முக்கியம். அதைவிட உயிர்தான் மிகவும் முக்கியம். முக கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வெப்பநிலையை பரிசோதிப்பது இப்படி எவ்வளவோ பாதுகாப்பு அம்சங்களுடன் வகுப்பறைக்கு தேர்வு எழுத மாணவர்கள் சென்றால்கூட அவர்கள் ஒருவித பயத்துடனேயே இருப்பார்கள். இதனால் அவர்களால் தேர்வை சிறப்பாக எழுத முடியாத நிலை ஏற்படலாம். எனவே இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தேர்வை நடத்த வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் பலருக்கு நோய் தொற்று ஏற்படுவதாக சொல்கிறார்கள். இதனால் எதை நம்புவது என்றே தெரியவில்லை. கொரோனா தொற்று முழுமையாக குறைந்து இயல்பான நிலைக்கு மக்கள் திரும்பியதும் தேர்வை நடத்துவதே இப்போதைக்கு சிறந்தது. அவசரப்பட்டு தேர்வை நடத்தி மாணவர்களின் உடல்ஆரோக்கியத்தில் விளையாட வேண்டாம். குறைந்தது 3, 4 மாதங்கள் கழித்து தேர்வை நடத்தலாம். அதற்குள் கொரோனாவும் கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம்.
திருநாவலூர் ஜோசப் கல்லூரி-மகதாலனே பெண்கள் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஜெயராஜ்:-
பிளஸ்-2 தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும், இல்லை என்றால் மாணவர்கள் கல்வியின் மேல் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்படும். நம்முடைய கல்வி நடைமுறையில் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு நாம் போதித்துக் கொண்டு வந்தோம். ஆனால் இன்று கொரோனா பரவலால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், அவர்களுக்கு வருகைப்பதிவு அவசியம் இல்லை என்றும், செல்போனில் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கலாம் என்றும் நம்முடைய கல்வியல் பழக்கத்தை முற்றிலுமாய் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மாணவனுக்கு அவர்களுடைய கற்றல் தரம் கண்டுபிடிப்பதற்கு தேர்வு முறைதான் சிறந்தது. 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கலாம். ஆனால் பிளஸ்-2 தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும். பிளஸ்-2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவுக்கும் நிலை ஏற்பட்டால், அது நிச்சயம் பரிதாபம் தான்.
எடப்பாளையம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார்:-
நோய் தொற்று குறைந்த பிறகு கண்டிப்பாக பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும். இதற்காக அரசு ஒரு தெளிவான முடிவை எடுத்து இப்போதே தேர்வு நடத்தப்படும் என்று எந்தவித தயக்கமும் இன்றி உறுதியான தகவலை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள், தங்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவும், உயர்கல்விக்கு தயார்படுத்தவும் வாய்ப்பாக அமையும். பிளஸ்-2 தேர்வை நடத்தவில்லை என்றால் உயர்கல்வியில் அனைத்து கல்லூரிகளிலும் 12-ம் வகுப்பை அடிப்படையாக கொண்டு தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். அந்த பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்தும் வகையில் பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும். அதுபோல் ஆசிரியர் தகுதி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கும் பிளஸ்-2 மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வு நடத்தவில்லையெனில் எதிர்காலத்தில் இந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும். ஆகவே மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும். தேர்வை நடத்தாமல்போனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்படும்.