கலசபாக்கம்
தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் ஏழை எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் விற்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பழங்களும் கிலோ ஒன்றுக்கு ரூ.100 இருந்து ரூ.300 வரை விற்கப்படுகிறது. கொரோனா பரவல் நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் காய்கறிகள், பழங்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வை குறைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.