திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

Update: 2021-06-03 11:10 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிகால் ஊராட்சிக்குட்பட்ட இடுக்குப்பிள்ளையார் கோவில் 4-வது தெருவில் அடிக்கடி குறைந்த அழுத்த மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு வீடுகளில் ஏ.சி., டி.வி. உள்பட பல்வேறு வகையான மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளது. 
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனக் கூறப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் இடுக்குப்பிள்ளையார் கோவில் தெருவுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்