‘மாதோஸ்ரீ’ இல்ல கதவு எங்களுக்கு மூடியுள்ளது: தேவேந்திர பட்னாவிஸ்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீ இல்லத்தின் கதவு எங்களுக்கு மூடப்பட்டுள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
அரசியல் பரபரப்பு
பா.ஜனதா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார். இதேபோல அதிருப்தி காரணமாக பா.ஜனதாவில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரசில் இணைந்த ஏக்நாத் கட்சேவையும் சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிஸ் நாந்தெட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், சரத்பவார், ஏக்நாத் கட்சேவின் வீட்டிற்கு சென்றது போலவே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மும்பை இல்லமான மாதோஸ்ரீ செல்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கதவு மூடியுள்ளது
அவர்களின் வீட்டிற்கான வருகைகளின் சூழல் வேறுபட்டது. மாதோஸ்ரீயை பொருத்தவரை அது எங்களுக்கான கதவை மூடியுள்ளது. இருப்பினும் நாங்கள் அங்கு செல்வதை நிறுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரியை பொதுபணித்துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் பாராட்டியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அசோக் சவான் எங்கள் தலைவரை புகழ்ந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவரை புகழ்வதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அவரை போலவே செயல்படுங்கள். இதனால் நீங்களும் புகழ்ச்சியை அடைவீர்கள்” என்றார். தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மாநிலங்கள் கோரிக்கையின் பேரில் 18-ல் இருந்து 44 வயதுக்கு உள்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கும்” என்றார்.