கொரோனா இல்லாத கிராமமாக்குங்கள், ரூ.50 லட்சத்தை வெல்லுங்கள்: மராட்டிய அரசு அறிவிப்பு

உங்கள் கிராமத்தை கொரோனா இல்லாத கிராமமாக்குங்கள், ரூ.50 லட்சத்தை வெல்லுங்கள் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-06-03 10:23 GMT
கிராமங்களில் கொரோனா
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை நகரங்களை போல கிராமங்களையும் பதம் பார்த்துள்ளது. எனவே கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமீபத்தில் காணொலி காட்சி மூலம் கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் உரையாற்றினார். அப்போது சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்னே கிராமத்தின் இளம் வயது பஞ்சாயத்து தலைவர் ருதுராஜ் தேஷ்முக்(வயது 21) அவரது கிராமத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளை வெகுவாக பாராட்டினார். மேலும் சில கிராம பஞ்சாயத்து தலைவர்களையும் பாராட்டிய அவர், “எனது கிராமம் கொரோனா இல்லாத கிராமம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் ேபாட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் கிராமங்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என கூறினார்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஹசன் முஷ்ரிப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல் பரிசு ரூ.50 லட்சம்
‘கொரோனா இல்லாத கிராமம்’ என்ற திட்டம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்த “எனது கிராமம், கொரோனா இல்லாத கிராமம்” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.ஒவ்வொரு வருவாய் மண்டலத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பாக பணிபுரியும் தலா 3 கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல்பரிசாக ரூ.50 லட்சமும், 2-வது பரிசாக ரூ.25 லட்சமும், 3-வது பரிசாக ரூ.15 லட்சமும் வழங்கப்படும். மாநிலத்தில் 6 வருவாய் மண்டலங்கள் உள்ளன. எனவே 18 பரிசுகள் இருக்கும். மொத்த பரிசுத்தொகை ரூ.5 கோடியே 40 லட்சமாகும்.போட்டியில் வெற்றிபெறும் கிராமங்களுக்கு பரிசுத்தொகைக்கு இணையான கூடுதல் ஊக்கதொகையும் வழங்கப்படும். இந்த தொகை கிராமத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.போட்டியில் பங்கேற்கும் கிராமங்களுக்கு 22 அளவுகோல்களின் கீழ் வெற்றி தீர்மானிக்கப்படும். இந்த வெற்றியை தீர்மானித்து தீர்ப்பு வழங்க கமிட்டி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்