சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 30 மதுபான பாட்டில்களை ரெயில்வே பாதுகாப்பு படை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையத்துக்குள் நீண்ட நேரமாக, பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதைக்கண்ட போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த பையில், 30 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சிறிது நேரம் அந்த பகுதியிலே போலீசார் நின்று கொண்டு, பையை எடுக்க யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டனர். ஆனால் கடைசி வரை யாரும் வரவில்லை. இதையடுத்து அந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த பாட்டில்களை யார் கொண்டு வந்தது? எப்படி இங்கு வந்தது? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஆந்திர வாலிபர் ஒருவர் இடுப்பில் ரூ.28 லட்சத்தை துணியால் சுற்றி மறைத்து கொண்டு வந்து, கடைசியில் போலீசிடம் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 30 மதுபான பாட்டில்கள் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சென்டிரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசாரின் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.