கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
நெற்குன்றத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் வாலிபர் ஒப்படைத்தார்.
திரு.வி.க. நகர்,
சென்னை அண்ணா நகர் மேற்கு ஜீவன் பீமா நகரை சேர்ந்தவர் ஸ்டாலின் கண்ணா (வயது 45). இவர், நெற்குன்றத்தில் சமையல் கலை குறித்த பயிற்சி கல்லூரி நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது வீட்டின் அருகே உள்ள வங்கி வாசலில் 500 ரூபாய் கொண்ட ஒரு பண்டல் கேட்பாரற்று கிடந்தது.
அந்த பணத்தை எடுத்து பார்த்ததில் ரூ.50 ஆயிரம் இருந்தது. வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்த யாரோ அதை தவறவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.
பின்னர் நேர்மையுடன் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ரூ.50 ஆயிரத்தை ஜெ.ஜெ.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணியிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் கண்ணாவின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர். அந்த பணம் யாருடையது? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.