வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

வாலாஜாபாத் அருகே பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-03 04:50 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பரந்தூர் கிராம ஊராட்சியில் மேட்டுபரந்தூர், பள்ளபரந்தூர், நாகப்பட்டு, காட்டுபட்டூர், ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்திருக்கின்றனர்.

மேலும் அறுவடை செய்த நெல்லை, கொட்டி வைக்க இடம் இல்லாத காரணத்தினாலும் நெடுஞ்சாலைகளிலும், கிராம வீதிகளிலும், தங்கள் வீட்டு வாசல்களிலும், விவசாயிகள் குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.

அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையில் நெல்மணிகள் நனைந்து முளைத்தும் வருகின்றது. அறுவடை செய்த நெல்லை குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள் பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடமும், பலமுறை கோரிக்கை விடுத்தும் உள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளான தங்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்