‘உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்’ - பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பேச்சு
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பேசினார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி பேசும்போது, ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் என உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கொரோன வைரஸ் சங்கிலித் தொடரை உடைத்தெறிய முடியும் என்று கூறினார்.
முன்னதாக பெரியபாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை குறித்தும் ஆக்சிஜன் மற்றும் மருந்து இருப்பு குறித்தும் ஆய்வு செய்து தேவையான உபகரணங்களை ஆஸ்பத்திரிக்கு வழங்கினர். அப்போது எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பி.ஜே.மூர்த்தி, சத்தியவேலு, தங்கம்முரளி உள்ளிட்ட கட்சியின் முக்கியப்பிரமுகர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.