ஊட்டிக்கு சுற்றுலா வந்த 20 பேருக்கு வருவாய்த்துறையினர் அபராதம்

இ-பதிவை தவறாக பயன்படுத்தி ஊட்டிக்கு சுற்றுலா வந்த 20 பேருக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக அபராதம் விதித்தனர்.;

Update: 2021-06-03 01:26 GMT
ஊட்டி,

இ-பதிவை தவறாக பயன்படுத்தி ஊட்டிக்கு சுற்றுலா வந்த 20 பேருக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக அபராதம் விதித்தனர். 

அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை இருக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பதிவு நடைமுறை அமலில் உள்ளது. அவசிய மருத்துவ சிகிச்சை, நெருங்கிய உறவினர்கள் இறப்பு போன்ற காரணங்களுக்கு மட்டும் இ-பதிவு முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே குன்னூர் அருகே உபதலை பழத்தோட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி இருப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி குன்னூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

தடையை மீறி வந்த சுற்றுலா பயணிகள்

அப்போது அங்குள்ள தங்கும் விடுதியில் 20 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இ-பதிவு பெற்று அங்கு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இ-பதிவு முறையை தவறாக பயன்படுத்தி, ஊட்டிக்கு சுற்றுலா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக வருவாய் துறையினர் அவர்களை தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றியதோடு, முழு ஊரடங்கு காலத்தில் தடையை மீறி சுற்றுலா வந்ததாக ரூ.5,000 அபராதம் விதித்தனர். பின்னர் அவர்களை புதுக்கோட்டைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்