திருச்சி விமான நிலைய வளாகத்தில் பயணிகளிடம் தங்கம் வாங்கும் தரகர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரிப்பு
திருச்சி விமான நிலைய வளாகத்தில் பயணிகளிடம் தங்கம் வாங்கும் தரகர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.;
செம்பட்டு,
திருச்சி விமான நிலைய வளாகத்தில் பயணிகளிடம் தங்கம் வாங்கும் தரகர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பு விமானங்கள்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களில் பயணிகள் யாரும் இந்தியாவிலிருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை இங்கிருந்து காலியாக சென்று வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும்.
தங்கம் கடத்தல்
இந்த விமானங்களில் வரும் பயணிகளிடம் வெளிநாடுகளில் உள்ள தரகர்கள் தங்கத்தை பசை வடிவிலோ அல்லது நகைகளாகவோ கொடுத்து அனுப்புகிறார்கள். அதை உரியவர்களிடம் ஒப்படைத்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை சன்மானமாக வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.
மேலும் தரகர்கள் கொடுக்கும் தங்கத்தை கடத்திவரும் பயணியின் புகைப்படத்தை திருச்சியில் உள்ள தரகருக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் திருச்சி விமான நிலைய வளாகத்தில் காத்திருந்து, பயணிகள் வந்தவுடன், அவர்களை அடையாளம் கண்டு அவற்றை பெற்றுக்கொண்டு சன்மானத்தை வழங்குகிறார்கள்.
அட்டகாசம் அதிகரிப்பு
சில நேரங்களில் இவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகள் சுங்கத்துறையினரிடம் சிக்கிக்கொண்டால், நகையை அவர்கள் பறிமுதல் செய்வதுடன், வழக்கையும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் தங்கம் எடுத்துவரும் பயணிகளை கடத்திச்சென்று தங்கத்தை மட்டும் பறித்துக்கொண்டு, விரட்டி விடும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறுகிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்தால் தங்கம் கடத்தி வந்தது அம்பலமாகிவிடும் என்று பலர் எதுவும் நடக்காதது போல் சென்று விடுகிறார்கள்.
ஒரு சில சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மட்டுமே விமான நிலைய போலீஸ்நிலையத்துக்கு வருகிறது. திருச்சியில் நடக்கும் விபரீதம் புரியாமல் பயணிகள் தங்கம் எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் வாங்க வரும் தரகர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.
இதை போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் கண்டும், காணாதது போல் இருப்பது மற்ற பயணிகளை வேதனை அடைய செய்துள்ளது. எனவே விமானநிலைய வளாகத்தில் வலம் வரும் தரகர்களை போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.