பெரம்பலூர் அருகே சாராய ஊறல் போட்டவர் கைது

பெரம்பலூர் அருகே சாராய ஊறல் போட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-02 19:30 GMT
பெரம்பலூர்
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் சாராயம் ஊறல் போட்டு வைத்திருப்பதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சாராய ஊறல் அழிப்பு
 அதன்பேரில் பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் செஞ்சேரி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவர் தனது வீட்டில் 2 பேரல்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பெருமாளை கைது செய்த போலீசார் சுமார் 300 லிட்டர் சாராய ஊறலை தரையில் ஊற்றி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்