மேலப்பாளையத்தில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் த.மு.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
கொேரானா காலம் முடிந்த பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதை கண்டித்து நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மேலப்பாளையம், டவுன், பேட்டை, ஏர்வாடி, மானூர் ஒன்றியம் தாழையூத்து, கரிக்காத்தோப்பு, ராதாபுரம் ஒன்றியம் திசையன்விளை, ஆத்தங்கரைபள்ளிவாசல், வள்ளியூர் ஒன்றியம் வள்ளியூர், துலுக்கர்பட்டி, வீரவநல்லூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் அவரவர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலப்பாளையத்தில் ஹாமீம்புரம், பஜார் திடல் அருகில், மைலகாதர் தெரு, முகம்மது லெப்பை தெரு, ஞானியார் அப்பா நகர், பங்களாப்பா நகர் ஆகிய 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹாமீம் புரம் 3- வது தெருவில் மாவட்ட தலைவர் வீடு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மைதீன், காஜா, யூசுப் சுல்தான், ரியாசூர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.