பெங்களூருவில் இதுவரை ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 40 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

பெங்களூருவில் இதுவரை ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 40 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஊரடங்கை மீறியதாக 601 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-02 19:16 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் இதுவரை ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 40 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஊரடங்கை மீறியதாக 601 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

வாகன சோதனை

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். 

இதற்காக நகரின் முக்கிய சாலைகளில் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று வரை போலீசார் நடத்திய வாகன சோதனையில், தேவையில்லாமல் சுற்றி திரிந்ததாக 1,031 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

40 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

அவற்றில் 914 இருசக்கர வாகனங்களும், 54 மூன்று சக்கர வாகனங்களும், 63 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும். பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து தினமும் சராசரியாக ஆயிரம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். 

பெங்களூருவில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 85 என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் என்.டி.எம்.ஏ. சட்டத்தின் கீழ் இதுவரை 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்