வங்காளதேச வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

வங்காளதேச வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

Update: 2021-06-02 19:04 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வங்காளதேச வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்து உள்ளது. 

இளம்பெண் கற்பழிப்பு

பெங்களூரு ராமமூர்த்திநகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வங்காளதேச நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை 4 பேர் கூட்டாக கற்பழித்திருந்தனர். அந்த இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மதுபாட்டிலால் தாக்கி கொடுமைப்படுத்தி இருந்தனர்.

 இதனை வீடியோ எடுத்தும் வெளியிட்டு இருந்தார்கள். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். பின்னா் சென்னையில் தலைமறைவாக இருந்த ஒரு தம்பதி உள்பட 3 பேரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்திருந்தனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வங்காளதேசத்தை சேர்ந்த சோபுஜ் (வயது 27) என்பவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தார்கள்.

போலீசாருக்கு கத்திக்குத்து

இந்த நிலையில் ராமமூர்த்திநகரில் உள்ள ஏரி அருகே தொழிலாளர்கள் வசிக்கும் குடிசையில் சோபுஜ் பதுங்கி இருப்பது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோபுஜை பிடிக்க நேற்று காலையில் ராமமூர்த்திநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

 அங்குள்ள குடிசையில் தங்கி இருந்த சோபுஜை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்கள். பின்னர் அவரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றார்கள்.

அவ்வாறு செல்லும் வழியில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் சோபுஜ் கூறினார். உடனே ஏட்டுவான தேவேந்திர நாயக், சோபுஜை ஜீப்பில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்றார். 

இந்த நிலையில், திடீரென்று சோபுஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏட்டு தேவேந்திர நாயக்கை குத்தினார். இதில், அவரது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜிக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது.

வாலிபர் சுட்டுப்பிடிப்பு

உடனே சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு சரண் அடைந்து விடும் சோபுஜை எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்ததுடன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜை, மீண்டும் கத்தியால் தாக்க முயன்றார். 

இதையடுத்து, சோபுஜை நோக்கி சிவராஜ் துப்பாக்கியால் சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. பின்னர் சோபுஜ், போலீஸ் ஏட்டு தேவேந்திர நாயக், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வங்காளதேசத்தை சேர்ந்த சோபுஜ் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் சோபுஜ் மூளையாக செயல்பட்டு இருந்ததும் தெரியவந்தது. வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் இதுவரை பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்