கொரோனா பாதித்து வீட்டு தனிமை: மனைவி, 2 மகள்களுடன் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
சாம்ராஜ்நகர் தாலுகாவில், கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருந்த நிலையில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதித்ததால் தனது வீட்டுக்கு யாரும் வர வேண்டாம் என்று மூத்த மகள் கூறியதால் அவர்கள் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டனர்.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் (மாவட்டம்) தாலுகா எச்.மூகஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவப்பா(வயது 46). இவரது மனைவி மங்களம்மா(35). இவர்களது மகள்கள் ஜோதி(14) மற்றும் சுருதி(12). இவர்களுக்கு மூத்த மகள் ஒருவர் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவருடன் மற்றொரு ஊரில் வசித்து வருகிறார்.
விவசாயியான மகாதேவப்பாவும், மங்களம்மாவும் கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தி வந்தனர். ஜோதியும், சுருதியும் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம்(மே) 9-ந் தேதி மகாதேவப்பாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, மங்களம்மா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மகாதேவப்பாவுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பாதிப்பு
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் அவர்களது வீட்டிலேயே சுகாதார துறையினர் தனிமையில் வைத்தனர். மேலும் ஆஷா ஊழியர்கள் வந்து வீட்டில் இருந்த மகள்கள் மற்றும் மங்களம்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவர்களும் தனிமையில் வைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாதேவப்பாவும், அவரது மனைவி மங்களம்மாவும் தங்களது மூத்த மகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது மகாதேவப்பா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து தெரிவித்து இருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மூத்த மகள், தற்போதைக்கு யாரும் தன்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மகாதேவப்பா மனமுடைந்தார்.
அதைக்கேட்ட அவரது மனைவி மங்களம்மாவும் மனம் உடைந்தார். பின்னர் அவர்கள் தங்களை கவனிக்க யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
பின்னர் அனைவரும் வீட்டில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் மகாதேவப்பாவின் வீட்டுக்கு ஒருவர் வந்தார். அவர் மகாதேவப்பாவை கூலிவேலைக்கு அழைத்துச் செல்ல வந்தவர் என்று கூறப்படுகிறது.
அவர் மகாதேவப்பாவின் வீட்டுக்கதவை நீண்ட நேரமாக தட்டிப்பார்த்துள்ளார். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சோகம்
இதையடுத்து இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திவ்யா சாரா தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றினர்.
அதையடுத்து சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே மகாதேவப்பா உள்பட 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தனர். அதையடுத்து போலீசார் சில தடயங்களை கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா பாதித்ததால் தந்தை, தாய் மற்றும் தங்கைகளை தனது வீட்டிற்கு வர வேண்டாம் என்று மூத்த மகள் கூறியதால் மனமுடைந்து 4 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.