கூடுதலாக மையங்கள் அமைத்து பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் மனு

கூடுதலாக மையங்கள் அமைத்து பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2021-06-02 18:46 GMT
பொள்ளாச்சி

கூடுதலாக மையங்கள் அமைத்து பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அமைச்சருக்கு மனு 

மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் மூலம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். 

மனுவை சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேலிடம் நேற்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவர் களின் நலன் கருதி ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. 

தொற்று குறைந்த உடன் முழுபாதுகாப்பு உடன் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்தி இருக்கலாம். 

பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் 

மேலும் மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் அகில இந்திய தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து இருக்க வேண்டும். 

தமிழக அரசு பிளஸ்-2 மாணவர்களின் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

தேர்வு ரத்து செய்யப்பட்டால் உயர் கல்வி செல்வதற்கு நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது சிரமமாகி விடும்.

எனவே பெருந்தொற்று குறைந்த உடன் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை எழுத்து தேர்வாக நடத்த வேண்டும். 

தேர்வு தேதியை முன் தேதியிட்டு ஒரு மாத காலத்திற்கு முன்பாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 

கூடுதல் மையங்கள் 

மேலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு கூடுதலாக தேர்வு மையங்கள் அமைக்கலாம். இதுகுறித்து கருத்து கேட்டால் தெரிவிக்க தயாராக இருக்கிறோம். 

எனவே மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு பிளஸ்-2 தேர்வினை ரத்து செய்ய வேண்டியதில்லை. 

தேர்வு தேதி பின்னர் அறிவித்தாலும் தேர்வு உறுதியாக நடைபெறும் என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்