இளம்பெண்ணின் தாய் மீது கொலைவெறி தாக்குதல் வீடு சூறை
மங்களூரு டவுனில் காதலை கைவிடும்படி எச்சரித்ததால் இளம்பெண்ணின் தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு வீட்டை சூறையாடிய காதலன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
மங்களூரு டவுனில், காதலை கைவிடும்படி எச்சரித்ததால் இளம்பெண்ணின் தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு வீட்டை சூறையாடிய காதலன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
காதல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் சக்திநகரில் வசித்து வருபவர் இளம்பெண். இவர் சயிர்பள்ளா பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண், தனது காதலனான ஹேமந்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் அண்ணன், ஹேமந்தை அழைத்து கண்டித்தார்.
மேலும் காதலனை கைவிட்டு விடும்படி எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமந்த் தனது நண்பர்களான கோடிகால் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், குந்ததபையல் பகுதியைச் சேர்ந்த சுஷால், காவூர் பகுதியைச் சேர்ந்த எத்திராஜ், கொட்டாராகல்பாவி பகுதியைச் சேர்ந்த அவினாஷ், உருவா பகுதியைச் சேர்ந்த தனுஷ், தீபக், கொட்டாரசவுக்கி பகுதியைச் சேர்ந்த பிரஜ்வெல், தீக்சித் ஆகியோருடன் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.
9 பேர் கைது
அங்கு அவரது அண்ணன் இல்லை. இதையடுத்து இளம்பெண்ணின் தாய் மீது ஹேமந்தும், அவரது கூட்டாளிகளும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பின்னர் வீட்டையும் சூறையாடினர்.
இச்சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தாய் கங்கனாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.