தோகைமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தோகைமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தோகைமலை
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாங்கினம் ஊராட்சி எரிச்சலூரில் பிரசித்தி பெற்ற குள்ளாயியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி வெள்ளைச்சாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்து பூஜையை முடித்து விட்டு கோவிலை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலுக்கு பூசாரி வந்தார்.
அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் முக்கிய நிர்வாகிக வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் சுக்காம்பட்டி குளத்தில் கிடந்த கோவில் உண்டியல் மட்டும் மீட்க்கப்பட்டது.
தோகைமலை பகுதியில் கடந்த 3 மாதத்தில் நடந்த 5-வது திருட்டு சம்பவம் ஆகும். இதனால் கோவிலில் திருடும் மர்மநபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.