குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் தற்கொலை முயற்சி
எட்டயபுரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
எட்டயபுரம், ஜூன்:
எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
மனைவி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமேனி போத்தி மகன் அய்யனார் (வயது 31). இவருடைய மனைவி முத்துமாரி (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இருவரும் விரக்தியில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முத்துமாரி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று வந்த அய்யனார், மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த அவரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். காயமடைந்த அய்யனாரை காரில் ஏற்றி கொண்டு வந்து எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
கணவருக்கு சிகிச்சை
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து முத்துமாரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.