கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திறந்தவெளியில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்
கொரோனா நோயாளி களின் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் திறந்தவெளியில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.;
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி, ஜிப்மர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக நாள் தோறும் 2000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். உயிரிழப்பும் 30-க்கும் மேல் இருந்தது.
இதனால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிந்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப் பதற்கான படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப் படுகின்றனர்.
படுக்கைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க கதிர் காமம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திறந்தவெளியில் கூடாரம் அமைத்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அங்கு தனியார் பங்களிப்புடன் கூடாரம் அமைத்து மின் விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட வசதிகளுடன் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தொற்று குறைந்துள்ளதால் தற்காலிக கூடாரம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் அருணிடம் கேட்டபோது, இரவு நேரங்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு மூச்சுத்திணறலோடு சிகிச்சைக்காக வருபவர் களுக்கு முதற்கட்டமாக சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வைத்துள்ளது. தேவைப்பட்டால் அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.