ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 7 கடைகளுக்கு சீல்
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்து வருவதால், இதனை தடுக்க தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது, காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள், மளிகை கடைகளுக்கு சில தளர்வுகள் வழங்கி இயங்க அனுமதி வழங்கப்பட்டன.
ஆனால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்ததன் விளைவாக முழு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு. அதில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீதிகள் தோறும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு வாகனங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி பலர் விற்பனை செய்து வருகிறார்கள்.
7 கடைகளுக்கு ‘சீல்’
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் ஊரடங்கு உத்தரவை மீறியும், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும் இயங்கி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் ராமச்சந்திரன் மற்றும் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பாண்டியன்நகர் மற்றும் நல்லப்பாநகர், வி.ஓ.சி.நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 2 மளிகை கடைகள் மற்றும் 2 இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதுபோல் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொங்கு மெயின்ரோடு, எஸ்.வி.காலனி, ஓம் சக்தி கோவில் பகுதிகளில் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 2 இறைச்சி கடைகள் மற்றும் ஒரு சலூனுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதுபோல் ஊரடங்கு உத்தரவை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.