முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி, அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடியும் என வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 800 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.80 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 604 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.