5 வயது சிறுமிக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுமி கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார்.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு, கடந்த ஒரு வாரமாக கண்ணில் கட்டிபோல இருந்தது. இது கோடைக்கால வெயில் தாக்கத்தில் வந்ததாக கருதி வீட்டிலேயே மருத்துவம் பார்த்தனர். ஆனால் கண்ணில் கட்டி கரையவில்லை. சிறுமிக்கு வலியும் குறையவில்லை.
இதனால் மருத்துவ பரிசோதனைக்காக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிறுமிக்கு, அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறும்போது, கொரோனாவால் பாதிக்கப்படாத என்னுடைய மகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியாகி விட்டது. தொடர்ந்து அவளுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.