கொரோனா பாதிப்புடன் வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்காக 3 ஆயிரம் மருந்து பெட்டகம் தயார்; தேனி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 ஆயிரம் மருந்து பெட்டகம் தயார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-02 16:35 GMT
தேனி:
கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 ஆயிரம் மருந்து பெட்டகம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், கம்பம், போடி அரசு மருத்துவமனைகள் மற்றும் 6 கொரோனா நல மையங்கள் ஆகிய இடங்களிலும், 8 இடங்களில் அமைக்கப்பட்ட இடைக்கால கொரோனா நல மையங்கள் ஆகிய இடங்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படவில்லை. மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, முக கவசம், சானிடைசர் போன்றவை அடங்கிய மருந்து பெட்டகம் (கிட்) தீர்ந்து போனதால் புதிதாக ஏற்பாடு செய்யாமல் இருந்தது. இதனால், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் தவித்தனர். பலரும் மருந்துக்கடைகளுக்கு சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டனர்.
3 ஆயிரம் பெட்டகம் தயார்
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மருந்து பெட்டகம் ஏற்பாடு செய்யும் பணி நடந்தது. இதற்காக மருந்து, மாத்திரைகள் மொத்தமாக வாங்கப்பட்டன. அவை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து குடோனுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக மருந்து பெட்டகம் தயாரிக்கும் பணி நடந்தது.
அதன்படி நேற்று 3 ஆயிரம் மருந்து பெட்டகம் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 2 வார இடைவெளிக்கு பிறகு கொரோனா நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கும் பணி நடந்தது. இருப்பினும் மாவட்டத்தில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும், தாமதமின்றி நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்