தேசிய-மாநில பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு

தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேசிய, மாநில இயற்கை பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-02 16:30 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பருவமழை வருகை, விவசாயத்துறையை தயார்ப்படுத்தும் பணிகள் குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை நன்றாக பெய்துள்ளது. பருவமழை 20 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 10 மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் மழை பெய்துள்ளது. கர்நாடகத்தில் பருவமழை வருகிற 6 அல்லது 7-ந் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டில் 153 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி ஆகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 135.48 லட்சம் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதைகள், உரங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு உள்ளது. டி.ஏ.பி. உர வினியோகத்தில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது.

டி.ஏ.பி., யூரியா உரங்களை உரிய நேரத்தில் வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். கர்நாடகத்தில் 690 விவசாய உபகரண மையங்கள் உள்ளன. இதில் 210 விவசாய உபகரண வங்கிகள் கிராமப்புறங்களில் செயல்படுகிறது. இந்த உபகரணங்கள் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காய்கறி, பூ, பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.19 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36 ஆயிரத்து 327 விவசாயிகளுக்கு ரூ.15.23 கோடி நிவாரண உதவி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பயிர்க்கடன் இலக்கை விட கூடுதலாக 16 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் கூடுதலாக ரூ.3,000 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். ஆதரவு விலையுடன் விவசாய விளைபொருட்களை அதிகளவில் கொள்முதல் செய்துள்ளோம். இதற்கு ரூ.1,067 கோடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதில் ரூ.250 கோடியை விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழையின்போது வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள கிராம பஞ்சாயத்து அளவில் செயல் திட்டம் வகுக்க வேண்டும். தேசிய, மாநில இயற்கை பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இவ்வவாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், தோட்டக்கலைத்துறை மந்திரி சங்கர், விவசாய விளைபொருட்கள் ஆணைய தலைவர் ஹனுமன்கவுடா பெலகுர்கி, முதல்-மந்தியின் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, வளர்ச்சி கமிஷனர் வந்திதா சர்மா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்