கன்னட நடிகர் அஜய் ராவின் உதவியாளர் கொரோனாவுக்கு பலி
ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பாரபட்சமின்றி அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
கர்நாடகம்,
கர்நாடகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பாரபட்சமின்றி அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. சினிமா துறையினரையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. சினிமா துறையை சேர்ந்த ஏராளமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் அஜய்ராவின் உதவியாளர் ஜெயராம் என்பவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெயராம், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயராம் உயிரிழந்ததை அறிந்த நடிகர் அஜய்ராவ், இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த 11 ஆண்டுகளாக எனக்கு உதவியாளராகவும், மேக்கப்-மேனாகவும் இருந்த ஜெயராம் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்டு மிகவும் மனமுடைந்தேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.