மாடுகளுக்கு தீவனமாகும் மாம்பழங்கள்
பட்டிவீரன்பட்டி பகுதியில் மாடுகளுக்கு மாம்பழங்கள் தீவனமாகி வருகின்றன.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், சித்தையனகோட்டை, சித்தரேவு, மருதாநதி அணை, கோம்பை பகுதிகள், தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன. காசா, கல்லாமை, செந்தூரம், காளைப்பாடி, சப்போட்டா, கிரேப், மல்கோவா, இமாம்பசந் போன்ற மாமரங்கள் அதிக அளவில் உள்ளன.
பட்டிவீரன்பட்டி பகுதிகளில் விளையும் மாம்பழங்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு எதிரொலியாக மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கல்லாமை போன்ற சில ரக மாங்காய்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் மாங்காய்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்து வருகிறது.
எனவே வேறுவழியின்றி பட்டிவீரன்பட்டி பகுதியில், சாலைேயாரங்களில் மாங்காய்களை கொட்டி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாம்பழங்கள், மாடுகளுக்கு தீவனமாகி விட்டன. இதனால் மா விவசாயிகளும், மாமரங்களை விவசாயிகளிடம் இருந்து குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாம்பழங்களை வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.