மினிலாரியில் கடத்திவரப்பட்ட ரூ.7¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
மேல்மலையனூர் அருகே மினிலாரியில் கடத்திவரப்பட்ட ரூ.7¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே ஞானோதயம் சோதனைச்சாவடியில் வளத்தி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ஷேக் அப்துல்லா, லட்சுமிநாராயணன், மனோஜ்குமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினிலாரியை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
இதில் மினிலாரியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், அவர் பெங்களூரு பொம்மனஹள்ளியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் இளங்கோவன் (வயது 29) என்பதும், விற்பனைக்காக பெங்களுருவில் இருந்து செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இளங்கோவனை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக மினிலாரியில் சோதனையிட போலீசார் முயன்றபோது, அதில் வந்த பிடாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜான்போஸ்கோ என்பவர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.