சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்மநபர்கள்
பழனி அருகே கன்னிமார் கோவிலில் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.;
பழனி:
பழனி அருகே கோதமங்கலம் கிராமத்தில் பாப்பான்குளம் கரைப்பகுதியில் கன்னிமார் கோவில் உள்ளது. திறந்த வெளியில் அமைந்துள்ள இந்த கோவிலில் கன்னிமார், கருப்பசாமி, சிவலிங்கம், நந்தி ஆகிய தெய்வங்களுக்கு சிறிய கல்லால் ஆன சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்று வட்டார கிராம மக்கள் விசேஷ நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர்.
இந்நிலையில் நேற்று காலை இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள், அந்த சிவலிங்கத்தை உடைத்திருப்பது தெரியவந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சிவலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு திரண்ட மக்கள், சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்ட ்இடத்தில் தேங்காய், மஞ்சள் துணியை வைத்து பூஜைகள் செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள கருப்பணசாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தற்போது சிவலிங்கத்தை உடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே சாமி சிலைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் மர்ம நபர்களை, கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.