ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கொன்ற திருடன் கைது
செல்போன் பறிப்புக்காக ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
தானே,
தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வித்யா பாட்டீல் (வயது35). அந்தேரியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மின்சார ரெயிலில் மகளிர் பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரெயில் கல்வா ரெயில் நிலையம் வந்தபோது ஓடிவந்த வாலிபர் அவர் இருந்த பெட்டியில் ஏறினார்.
இதனை கண்ட அங்கிருந்த பெண் பயணிகள் சிலர் கீழே இறங்கும்படி சத்தம் போட்டனர். அப்போது வாலிபர் திடீரென வித்யா பாட்டீல் கையில் இருந்த செல்போனை பறித்தார்.
அதிர்ச்சி அடைந்த வித்யா பாட்டீல் செல்போனை வாலிபரிடம் இருந்து மீட்க முயன்றபோது வாலிபர் அவரை பிடித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் நிலைதடுமாறிய வித்யா பாட்டீல் ரெயிலில் இருந்து நேராக தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரெயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே வித்யா பாட்டீல் பலியானார். பின்னர் அந்த திருட்டு ஆசாமி தப்பிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் ரெயில் விபத்தில் பலியான வித்யா பாட்டீலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மும்ராவை சேர்ந்த பைசல் சேக்(21) எனவும் அவர் மீது 21 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.