போலீசார் உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டி, பல்டி அடித்த பா.ஜனதா எம்.பி.

பா.ஜனதா எம்.பி. சம்பாஜி ராஜே போலீசார் தன்னை உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டி, பின்னர் பல்டி அடித்து உள்ளார்.

Update: 2021-06-02 15:23 GMT
மும்பை,

கோலாப்பூர் ராஜவம்சத்தை சேர்ந்தவர் சம்பாஜி ராஜே. பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட்டால் தடைவிதிக்கப்பட்டுள்ள, மராத்தா இடஒதுக்கீடை நிறைவேற்றுவது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்தநிலையில் அவரை அரசு உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில், "என்னை கண்காணிப்பதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நேர்மையான, வெளிப்படையான நபரான என்னை உளவுபார்த்து அரசு என்ன சாதிக்கப்போகிறது என்பது தெரியவில்லை" என கூறியிருந்தார்.

ஆனால் பா.ஜனதா எம்.பி.யின் குற்றச்சாட்டை மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மறுத்தார். இதுகுறித்து மந்திரி டுவிட்டரில், "அவர் (சம்பாஜி ராஜே) சிந்துதுர்க் சென்ற போது அவருக்கு சமூக விரோதிகளால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நான் இதுகுறித்து அவரிடம் பேசிவிட்டேன். தவறான புாிதல் சரிசெய்யப்பட்டது" என கூறியிருந்தார்.

இதையடுத்து பா.ஜனதா எம்.பி. சம்பாஜி ராஜேயும் தனது குற்றச்சாட்டை திரும்பபெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மந்திரியின் விளக்கம் எனக்கு திருப்தி அளிக்கிறது. எனவே இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாக நினைக்கிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்