தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 518 பேர் பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு,
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.காய்ச்சல் பிரிவு, புதிதாக திறக்கப்பட்ட 100 கொரோனா படுக்கைகள், கொரோனா நோயாளிகள் உள்ள பகுதி என பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:-
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு 680 படுக்கைகள் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 165 படுக்கைகள் உள்ளது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகள் தட்டுபாடு இல்லை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு தமிழக அரசுக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். செங்கல்பட்டில் வர பிரசாதமாக எச்.எல்.எல். நிறுவனம் 10 ஆண்டு காலமாக இயங்காமல் உள்ளது. எச்.எல்.எல் நிறுவனம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும். தடுப்பூசி மட்டுமே இந்த பேரிடருக்கான தீர்வு. டாக்டர்கள், நர்சுகள் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது
6-ந்தேதிக்கு பிறகு தமிழத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்காது. தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, பாலாஜி, பனையூர் பாபு, அரவிந்த் ரமேஷ் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.