நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை
நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பை குறைத்து, உயிரிழப்பை தடுத்து நிறுத்தி, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பீதி முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஏற்கனவே 5 ஆயிரம் தள்ளுவண்டி, 2 ஆயிரம் சிறிய வண்டிகள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நடமாடும் வண்டிகள் மூலம் மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 3,200 பேர் ‘ஆன்-லைனில்’ பதிவு செய்துள்ளனர். ‘ஆன்-லைனில்’ காய்கறிகள், மளிகை பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதையும் மீறி அதிக விலைக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் தெரிவிக்கலாம். புகார் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், எம்.எல்.ஏ., எம்.கே.மோகன், மருத்துவமனை டீன் டாக்டர் சாந்தி மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.