100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது.;

Update: 2021-06-02 05:24 GMT
தாம்பரம், 

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை ஊரகத்தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க.எம்.பி.,டி.ஆர்.பாலு ஆகியோர் திறந்து வைத்தனர்.அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், எம்.எல்.ஏ.க்கள் ,இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான டி.ஆர் பாலு நிருபர்களிடம் பேசுகையில்,டெல்லியில் ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் தினந்தோறும் அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடுவது மட்டுமே வழி என்று எடுத்து கூறி தமிழக முதல்-அமைச்சர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில், கிடப்பில் போடப்பட்ட செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிகளை முடுக்கிவிட்டு தடுப்பூசி தயாரிக்கக்கூடிய பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் தற்போதைய நிலைமை என்னவென்றால் நீதிமன்றம் தடுப்பூசினை மக்களுக்கும் வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், முதல்-அமைச்சர்கள் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மோசமான சூழ்நிலையில் முன்நின்று எந்தவித முயற்சியும் எடுக்காதது எடுத்துகாட்டாக உள்ளது

தடுப்பூசி மையத்தை தானே எடுத்து நடத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது. 24 மணி நேரமும் முதல்-அமைச்சருக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் சுகாதார செயலாளரும் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசியை போட்டு தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் நிலைமை மாறியுள்ளது, இங்கிலாந்தில் நிலைமை மாறியுள்ளது, ஆனால் இந்தியா மட்டும் ஏன் பின்தங்கி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. தடுப்பூசி இந்தியாவில் தட்டுப்பாடாக இருந்தால் அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு கவனத்துடன் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்