பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகள்

பூந்தமல்லி காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அனுமதி அட்டை பெறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகள் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Update: 2021-06-02 05:02 GMT
பூந்தமல்லி,

கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக வாகனங்கள் மூலம் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி அட்டை பெற்ற வாகனங்களே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதை மீறி சில வியாபாரிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் அனுமதி அட்டை பெற்று வியாபாரம் செய்ததாக 5 நடமாடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அனுமதி அட்டையை யாரிடம் பெறுவது என்ற குழப்பத்தை தீர்க்க கோரி நேற்று வியாபாரிகள் காட்டுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து அங்கு வந்த பூந்தமல்லி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் மற்றும் அ.தி.மு.க.வின் ஒன்றிய கவுன்சிலர் கவுதமன், ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி அட்டை பெற்று வியாபாரம் செய்ய வேண்டும் என தெளிவி படுத்தினர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:-

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. 15 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தொகைக்கு இது போதாது என்ற காரணத்தால் ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பமிட்டு வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டது. இதனால் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி அளித்தது செல்லாது என்று கூறி வாகனங்களை பறித்து சென்றதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்