சேலத்தில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
சேலத்தில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம்:
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 107 மையங்களிலும், மாநகர் பகுதியில் 16 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக சேலம் குமாரசாமிப்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு சேலம் ராஜாஜி ரோட்டில் உள்ள ஸ்ரீ சாரதா பால மந்திர் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை தடுப்பூசி போட்டுக்கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை அங்கு வந்தனர். அப்போது தடுப்பூசி இருப்பு இல்லை என்று பள்ளியின் நுழைவு பகுதியில் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி போட சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.