நங்கவள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் பலி

நங்கவள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் பலியானார்.

Update: 2021-06-01 22:28 GMT
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை மதிப்பீட்டாளர்
மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவருடைய மனைவி நதியா (வயது 33). இவர் நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நதியா வழக்கம் போல வங்கிக்கு பணிக்கு சென்றார். பின்னர் மதியம் வங்கியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது நதியா, தனது மகன் சபரிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சபரிநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் நதியா அமர்ந்து இருந்தார்.
பலி
நங்கவள்ளி- மேச்சேரி சாலையில் குட்டப்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சபரிநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னால் உட்கார்ந்து வந்த நதியா  நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். 
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்