தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டம்: புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநில அளவில் 3-வது இடம் ஈரோடு பிடித்தது. மேலும், பெண் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-01 22:11 GMT
3-வது இடம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவுக்கு குறைந்து வந்தாலும், ஈரோடு மாவட்டத்தில் தொற்றின் பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிக பாதிப்பில் தமிழகத்திலேயே ஈரோடு 3-வது இடத்தை பெற்றுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்து 278 ஆக உயர்ந்தது. இதில் 41 ஆயிரத்து 829 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,421 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர்.
16 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 1,500-க்கும் அதிகமாக இருந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 16 ஆயிரத்து 93 ஆக உயர்ந்தது. இதில் சுமார் 11 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன்படி மாவட்டத்தில் 134 பகுதிகளில் மொத்தம் 587 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
8 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மாவட்டத்தில் மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 45 வயது ஆண் கடந்த மாதம் 12-ந் தேதியும், 55 வயது ஆண் 13-ந் தேதியும், 50 வயது ஆண் 15-ந் தேதியும், 69 வயது முதியவர் 16-ந் தேதியும், 39 வயது ஆண் 17-ந் தேதியும், 70 வயது மூதாட்டி 23-ந் தேதியும், 40 வயது பெண், 78 வயது முதியவர் ஆகியோர் 30-ந் தேதியும் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 356 ஆக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் வெளியில் செல்லும்போது அவசியம் முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அரசின் வழிமுறைகளை பின்பற்றி நோயை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்