நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செருவூட்டி கருவிகள்

அமெரிக்காவில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-01 20:32 GMT
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் போதுமான அளவு இல்லை என்ற குறைபாடு இருந்து வந்தது.

இந்த நிலையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டருக்கு படித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் ‘‘டி.வி.எம். குளோபல் அலுமினி’’ என்ற சங்கத்தை அமைத்து உள்ளனர்.
அந்த சங்கத்தின் சார்பில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் ஐந்து, 5 லிட்டர் செறிவூட்டும் கருவிகள் ஐந்து என மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த கருவிகள் நேற்று நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து டீன் டாக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், அழகேசன், ராஜேஷ், சுரேஷ்குமார், சாந்தாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்