நெல்லை மருத்துவக்கல்லூரியில் 2-வது நாளாக தடுப்பூசி போட குவிந்த மக்கள்
நெல்லை மருத்துவக்கல்லூரியில் 2-வது நாளாக தடுப்பூசி போட மக்கள் குவிந்தனர்.
நெல்லை:
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 84 நிரந்தர தடுப்பூசி மையங்களிலும், 32 தற்காலிக மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மையத்திலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக நெல்லை மாநகர பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களில் காலை 10 மணிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. ஏராளமானவர்கள் வந்திருந்து கேட்டதற்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். இதனால் ஏராளமானவர்கள் தடுப்பூசி போடாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி போடுவதற்கு நேற்று ஏராளமான மக்கள் குவிந்தனர். பல்வேறு இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு தொடருவதால், அங்கிருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களை போலீசார் ஒழுங்குப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர். பெரும்பாலானவர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட வேண்டும் என்று வந்திருந்தனர். ஆனால் நேற்று கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் கோவிஷில்டு தடுப்பூசி போடுமாறு கூறினார்கள். அதற்கு ஏராளமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ‘தமிழக அரசு வருகிற 3-ந் தேதி முதல் தடுப்பூசி போட வேண்டாம் என்று கூறியதால் எங்களிடம் உள்ள மருந்துகளை வைத்து தடுப்பூசி போட்டு உள்ளோம். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி வந்ததும் அனைவருக்கும் போடப்படும்’ என்றார்.