ஊரடங்கால் முடங்கிய முந்திரி பழ விற்பனை
ஊரடங்கால் முடங்கிய முந்திரி பழ விற்பனை
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் உள்ள வெள்ளையம்பட்டி, முடுவார்பட்டி, சரந்தாங்கி, சால்வார்ட்டி, கணவாய்காடு மற்றும் மலை அடிவார பகுதிகளில் முந்திரி மரங்கள் அதிகம் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் இந்த முந்திரி மரங்களில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கால், முந்திரி பழம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பழங்கள் அனைத்தும் மரங்களிலேயே காய்ந்து கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த பழங்கள் கூடை கூடையாக மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்ட பகுதிகளுக்கு வேன்கள் மூலம் விற்பனைக்காக அனுப்பப்படும். ஆனால் கடந்த வருடமும், நடப்பு ஆண்டும் கொரோனா ஊரடங்கினால் இந்த முந்திரி பழங்கள் வெளியூருக்கு அனுப்ப முடியாமல் போய்விட்டது. இது குறித்து விவசாயியும், கூட்டுறவு வங்கி தலைவருமான சரந்தாங்கி முத்தையன் கூறியதாவது, கடந்த சில வாரங்களாக மாம்பழச் சீசன் இருந்து வருகிறது. இந்த மாம்பழங்களும் கட்டுமான விலைக்கு போகாமல் பாதி விலைக்கு போகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் போலவே தற்போது அறுவடையான முந்திரி பழங்கள் வெளியூருக்கு அனுப்ப முடியாமல் ஒரு கிலோ ரூ.30-க்கு கூறுகட்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பழங்கள் பயிரிடும் விவசாயிகள் பெரிதும பாதிப்பை அடைந்துள்ளனர். மொத்தத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்றுதான் விவசாயிகள் நஷ்டத்திற்கு காரணம் என்றார்.
ஊரடங்கால் விற்பனை குறைந்து வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முந்திரி விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.