திருச்சியில் மொபட்டுடன் சிறுவனை கடத்திய 2 பேர் மீது வழக்கு
திருச்சியில் மொபட்டுடன் சிறுவனை கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சியில் மொபட்டுடன் சிறுவனை கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொபட்டுடன் சிறுவன் கடத்தல்
திருச்சி பாலக்கரை கூனிபஜார் கோரிமேடு பகுதியைச்சேர்ந்தவர் ரகு (வயது 40). இவருடைய மகன் மனோஜ் குமார் (13). நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ரகு தனது மகன் மனோஜ்குமாருடன் மொபட்டில் வெளியே வந்தார். கூனிபஜார் ஐஸ் பேக்டரி அருகில் மொபட்டை நிறுத்திய ரகு, அங்கு மொபட்டுக்கு காவலாக மகன் மனோஜ்குமாரை நிறுத்தி விட்டு, அருகே சென்று வருவதாக கூறி புறப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து ரகு வந்து பார்க்கையில், அங்கு மொபட்டுடன் மகன் மனோஜ்குமாரை காணவில்லை. அருகில் விசாரித்தபோது, யாரோ 2 ஆசாமிகள் மொபட்டுடன் சிறுவனை வலுக்கட்டாயமாக கொண்டு சென்றது தெரியவந்தது. எனவே, மகனை யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என பாலக்கரை போலீசில் ரகு புகார் கொடுத்தார்.
கடத்தல் வழக்கு
புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் மொபட்டுடன் சிறுவனை அதே இடத்தில் விட்டு விட்டு 2 ஆசாமிகளும் சென்று விட்டனர். விசாரணையில், சிறுவனை மொபட்டுடன் அழைத்து சென்றவர்கள் பாலக்கரை பருப்புக்கார தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் ரகுராம், பீமநகர் மார்சிங்பேட்டையை சேர்ந்த கந்தன் மகன் ஹரிஹரன் என்பது தெரிய வந்தது.
மேலும், பக்கத்தில் மெடிக்கல் ஷாப் இல்லை என்பதால், மருந்து, மாத்திரை வாங்குவதற்காக அருகே உள்ள மெடிக்கலுக்கு மொபட்டுடன் சிறுவனையும் அழைத்து சென்றது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் இருவர் மீதும் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரகுராம் மீது ஏற்கனவே கூட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக பாலக்கரை, கண்டோன்மெண்ட் ஆகிய போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.