சோதனை சாவடி அமைத்து கிராம மக்கள் கண்காணிப்பு
வெளிநபர்கள் உள்ளே வருவதை தடுக்க சோதனை சாவடி அமைத்து கிராம மக்கள் கண்காணித்து கொரோனா பரவலை தடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
கிணத்துக்கடவு
வெளிநபர்கள் உள்ளே வருவதை தடுக்க சோதனை சாவடி அமைத்து கிராம மக்கள் கண்காணித்து கொரோனா பரவலை தடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
5 பேருக்கு கொரோனா
கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோன்று பல கிராமங் களில் பொதுமக்களே முன்வந்து தங்கள் பகுதிக்குள் வெளிநபர்கள் வருவதை தடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து இங்கு வெளி நபர்கள் உள்ளே வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு
இதற்காக இந்த கிராமத்துக்கு வரும் அனைத்து பகுதிகளும் அடைக்கப் பட்டன. மேலும் பகுதியில் சோதனை சாவடியை கிராம மக்களே அமைத்தனர். அதில் அவர்கள் சுழற்சி முறையில் அமர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் அவசிய தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதித்து வருகிறார்கள்.
வெளி நபர்கள் வந்தால், அவர்களை தடுத்து நிறுத்தி, யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்கள்? எதற்காக வருகிறார்கள்? என்று கேட்பதுடன், முறையான காரணங்கள் சொல்லவில்லை என்றால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
தீவிர முயற்சி
எங்கள் கிராமத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகிறோம்.
தேவை இல்லாமல் யாரையும் எங்கள் கிராமத்துக்குள் நுழைய அனுமதிப்பது இல்லை. மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.
எனவே எங்கள் கிராமத்துக்குள் தேவை இல்லாமல் வெளிநபர்கள் யாரும் வர வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.